mercredi 29 août 2012

பாவேந்தா்




பயமறியா நாவீறு படைத்த சிங்கம்!

நயமான சொல்லழகும் நமைம யக்கும்
    நலமான கருத்தழகும் நாளும் ஊட்டிச்
சுயமான சிந்தனையும் செயலும் சேரத்
    தூயநறும் பகுத்தறிவுப் பாதை காட்டிச்
சுயமரியா தைக்கொள்கை நெஞ்சில் சூழச்
    சுயநலத்தை வெறுத்துவிட்ட தமிழின் தோன்றல்!
பயமறியா நாவீறு படைத்த சிங்கம்
    பாவேந்தர் என்பதையே எவர்ம றுப்பார்?

புடம்போட்ட தங்கமென வீற்றி ருந்த
    புகழ்மணக்கும் செந்தமிழின் மூச்சே! உன்றன்
தடங்காணா ஊரேது? நகரு மேது?
    தமிழ்உறையும் மதுக்குடமே! தென்றற் காற்றே!
திடமான கொள்கையுடைத் திருவி டத்தின்
    திருவிளக்கே! பாவேந்தே! தமிழின் ஊற்றே!
நடமாடிப் புதுவைக்கே அழகு சேர்த்த
    நன்னயத்தை நாட்டினிலே எவர்ம றப்பார்?

தமிழுணர்வு பகுத்தறிவாம் இவைக ளோடு
    சமுதாயச் சீர்திருத்தம் மகளிர் ஏற்றம்
அமுதாகும் எனக்கண்டு போற்றி நின்றார்
    அருந்தமிழ்ச்சீர் பாவேந்தர்! தமிழ்க்கு லத்தை
இமைபோலக் காத்திட்டார்! இடர்கள் சூழா(து)
    இருக்கவழி பலகண்டார்! இன்னுங் கேட்டால்
'நமையாள வேண்டுமடா பொதுமை எண்ணம்'
    நாளுமவர் கொள்கைஇதை எவர்ம றைப்பார்?

1 commentaire:

  1. நடமாடிப் புதுவைக்கே அழகு சேர்த்த
    நன்னயத்தை நாட்டினிலே எவர்ம றப்பார்?

    என்பதில் தமிழுக்கே அழகு சோ்த்த என்றிருந்தால் மிகவும் நன்றாக கருத்துசெறிவுடன் இருந்திருக்கும்

    RépondreSupprimer