mardi 23 juillet 2013

என் அன்னை!




என் அன்னை!

எடுப்பு

பாலூட்டிச் சீராட்டித் தாலாட்டினாள்! - நல்ல
பண்பூட்டி அன்பூட்டித் தமிழூட்டினாள்! - அன்னை...
                                         (பாலூட்டி)
தொடுப்பு

காலிரண்டில் எனைப்போட்டுக் கதைகூறினாள்! - என்
கண்ணிரண்டில் மையூட்டித் தலைவாரினாள்! - அன்னை...
                                         (பாலூட்டி)
முடிப்பு

எனைப்பெற்ற என்தாயே! கலியாணியே! - ஏன்
எனைவிட்டுப் பிரிந்தாயே கலைவாணியே!
மனைவிட்டுப் போனாலும் உன்காட்சியே! - என்
மனம்விட்டுப் போகாது உன்ஆட்சியே! - அன்னை...
                                         (பாலூட்டி)

கல்லூரி போய்வரவே எனைஅனுப்பினாள்! - வாயிற்
கதவோரம் காத்திருந்து சிலையாகினாள்!
எல்லாமும் எனக்குண்டு நீயில்லையே - அம்மா
என்றேனும் உனைக்காண்பேன் தடையில்லையே! - அன்னை...
                                         (பாலூட்டி)

மொழிகளில் இனியது




மொழிகளில் இனியது

எடுப்பு

மொழிகளில் இனியது முத்தமிழ் அமிழ்தே! - இங்கு
முந்தய மொழிகளில் மூத்ததும் அதுவே!
                                         (மொழி)
தொடுப்பு

விழிகளைக் காப்பது போலவே காப்பாய்! - நம்
வியன்தமிழ்ச் சிறப்பினை எங்குமே சேர்ப்பாய்!
                                         (மொழி)
முடிப்பு

கம்பனின் கற்பனைக் கண்டெனச் சுவைப்பாய்! - நற்
கருத்துள வள்ளுவன் குறளினை விதைப்பாய்!
நம்முடை இளங்கோவின் சிலம்பினை இசைப்பாய்! - உயர்
நலந்தரும் தமிழென நாளுமே குதிப்பாய்!
                                         (மொழி)

கவினுற அகம்புறம் கமழ்வதும் தமிழே! - தொல்
காப்பிய இலக்கணம் திகழ்வதும் தமிழே!
புவிமகிழ் திருப்புகழ் பூப்பதும் தமிழே! - நாம்
போற்றிடும் உயிரென இருப்பதும் தமிழே!
                                         (மொழி)

06.01.2013

ஓம் குருநாதா!




ஓம் குருநாதா!

எடுப்பு

ஓம் குருநாதா சரணம் அய்யா
உயிரினும் மேலாம் கீதா நந்தா!....ஓம்

தொடுப்பு

தனக்கென வாழாத் தனித் தலைவா!
தன்னிகர் இல்லாக் கீதா நந்தா!
புனிதமாம் யோகக் கலையிலே உயர்ந்தாய்!
போற்றும்அட் டாங்க யோகியாய்ச் சிறந்தாய்!...ஓம்

முடிப்பு

துணிச்சலை மனத்திடைத் துணையெனக் கொண்டாய்!
தூய்மையாய் அறநெறி தொடர்ந்திட நின்றாய்!
பணிவுடன் பக்தியைப் பரப்பியே சென்றாய்!
பண்புடைச் செல்வமே என்குரு நாதா!...ஓம்

புதுவையின் அரிமா எனும்பெயர் பூண்டாய்!
பொன்மனச் செம்மலே புதுமைகள் புரிந்தாய்!
மதுரமாம் தமிழையும் மணக்கவே இருந்தாய்!
மாசிலாச் சுவாமி சற்குரு நாதா!...ஓம்

தமிழர் பெருங்கடன்




தமிழர் பெருங்கடன்

எடுப்பு

தமிழர் பெருங்கடன் எதுவாகும் - உயர்
தமிழைப் படி..உடன் அதுவாகும்!
                                         (தமிழர்)
தொடுப்பு

கமழும் தமிழ்மரை பொதுவாகும் - அதன்
கருத்துச் சுவைமிகும் மதுவாகும்!
                                         (தமிழர்)
முடிப்பு

பிள்ளை வளர்ந்திடவே பாலூட்டு - நன்கு
பேசி மகிழ்ந்திடவே தமிழூட்டு!
பள்ளிக் களந்தனிலே பண்பூட்டு - நாளும்
பாரிற் சிறந்திடவே அன்பூட்டு!
                                         (தமிழர்)
பெற்றவர் தெய்வமாம் நீபோற்று - உனை
உற்றவள் அன்பினள் காப்பாற்று!
கற்றவர் சொற்களில் கருத்தூன்று - என்றும்
நற்றமிழ் அமிழ்தினை நீவேண்டு!
                                         (தமிழர்)