mercredi 29 août 2012

பாவேந்தா்




பயமறியா நாவீறு படைத்த சிங்கம்!

நயமான சொல்லழகும் நமைம யக்கும்
    நலமான கருத்தழகும் நாளும் ஊட்டிச்
சுயமான சிந்தனையும் செயலும் சேரத்
    தூயநறும் பகுத்தறிவுப் பாதை காட்டிச்
சுயமரியா தைக்கொள்கை நெஞ்சில் சூழச்
    சுயநலத்தை வெறுத்துவிட்ட தமிழின் தோன்றல்!
பயமறியா நாவீறு படைத்த சிங்கம்
    பாவேந்தர் என்பதையே எவர்ம றுப்பார்?

புடம்போட்ட தங்கமென வீற்றி ருந்த
    புகழ்மணக்கும் செந்தமிழின் மூச்சே! உன்றன்
தடங்காணா ஊரேது? நகரு மேது?
    தமிழ்உறையும் மதுக்குடமே! தென்றற் காற்றே!
திடமான கொள்கையுடைத் திருவி டத்தின்
    திருவிளக்கே! பாவேந்தே! தமிழின் ஊற்றே!
நடமாடிப் புதுவைக்கே அழகு சேர்த்த
    நன்னயத்தை நாட்டினிலே எவர்ம றப்பார்?

தமிழுணர்வு பகுத்தறிவாம் இவைக ளோடு
    சமுதாயச் சீர்திருத்தம் மகளிர் ஏற்றம்
அமுதாகும் எனக்கண்டு போற்றி நின்றார்
    அருந்தமிழ்ச்சீர் பாவேந்தர்! தமிழ்க்கு லத்தை
இமைபோலக் காத்திட்டார்! இடர்கள் சூழா(து)
    இருக்கவழி பலகண்டார்! இன்னுங் கேட்டால்
'நமையாள வேண்டுமடா பொதுமை எண்ணம்'
    நாளுமவர் கொள்கைஇதை எவர்ம றைப்பார்?

mardi 28 août 2012

முனைவா் இரா. திருமுருகனார்


எடுப்பு

முனைவரின் நூலை முனைந்துபடி! திரு
முருகரின் நூலை முழுதும்படி!
                                 (முனைவரின்)
தொடுப்பு

நினைவினில் நிலவும் தெளிதமிழே! அவர்
கனவிலும் குலவும் கனிதமிழே!
                                 (முனைவரின்)

முடிப்பு

முத்தமிழ் நூல்களை முறைப்படி கற்றவர்! தமிழ்
மொழிப்போர் மறவரில் முதலிடம் பெற்றவர்!
மெத்தவே இசையினில் மேன்னிலை யுற்றவர் - மிக
மென்மையாய் இலக்கணம் சொல்லஈ டற்றவர்!
                                 (முனைவரின்)

ஆட்சியில் தமிழ்வர அரும்பாடு பட்டவர் - புகும்
அயல்மொழி அகற்றிட அறிக்கைகள் விட்டவர்!
மாட்சிமை அன்பால்நம் மனங்களைத் தொட்டவர்-ஆய்வு
மாணவர்க் காகவே தம்முடல் இட்டவர்
                                 (முனைவரின்)

புலவரில் சிறந்தவா்


எடுப்பு

புலவரிற் சிறந்தவர் இலக்குவனார்! அவர்
பூந்தமிழ்க் கண்டெனப் பலபுகழ்வார்!
                                  (புலவரில்)

தொடுப்பு

இலக்கிய இலக்கணக் காவலராம்! அவர்
இன்தமிழ்ப் பேச்சினில் நாவலராம்!
                                  (புலவரில்)

முடிப்பு

திருக்குறள் தெளிவுரை திறம்பட வடித்தார்! உயர்
தென்மொழி ஆய்வுகள் தேனெனக் கொடுத்தார்!
நெருக்கற நுழைந்திடும் இந்தியைத் தடுத்தார்! நம்
நிலத்திடைச் செந்தமிழ் நிலவிடத் துடித்தார்!
                                  (புலவரில்)

களிதமிழ் கமழ்ந்திடக் கருத்துகள் மொழிந்தார்! தொல்
காப்பியம் மணந்திடக் கனியுரை பொழிந்ததர்!
தெளிதமிழ் உயர்ந்திடச் சிந்தையில் விழைந்தார்! நம்
செம்மொழி காத்திடச் சிறைதனில் நுழைந்தார்!
                                  (புலவரில்)

இலக்கணச்சுடா் திருமுருகா


எடுப்பு

செந்தமிழ்ச் செல்வமே! திருமுருகா! உன்
சந்தமே இசைதரும் பெரும்பரிசா!
                                  (செந்தமிழ்)

தொடுப்பு

சிந்துகள் பாடிடச் செய்த..நூல் அருமை! உன்
சிந்தனை யாவிலும் நந்தமி;ழ்ப் பெருமை!
                                  (செந்தமிழ்)

முடிப்புக்கள்

சூடிடச் சூடிடத் தூமலர் கசங்கும்! - இங்குத்
தோதிலா அயல்மொழி உனைக்கண்டு பொசுங்கும்!
பாடிடப் பாடிடப் பண்ணிசை வழங்கும் - உனை
தேடிடத் தேடிடத் தெளிதமிழ் முழங்கும்!
                                  (செந்தமிழ்)

இலக்கிய எண்ணங்கள் இயற்றிய தலைவா! தமிழ்
இலக்கணம் இனித்திடும் என்றநற் புலவா!
தலைக்கணத் தலைகளைத் தட்டிய தமிழா! - இன்று
தவிர்த்திட எங்களை விட்டதேன் முருகா
                                   (செந்தமிழ்)

தமிழரின் கடமை



 
தமிழைப் படிப்பதே தமிழரின் கடமை - அதில்
தவறி நடப்பதோ தனிப்பெரு மடமை
                                       (தமிழை)

அமிழ்தென இனிப்பதோ அருந்தமிழ் ஒன்றே
அதற்கிணை உலகினில் வேறில்லை இன்றே
                                       (தமிழை)

இலக்கணச் செறிவுடன் இருப்பதும் தமிழே
ஈடிலாக் குறளினால் சிறப்பதும் தமிழே
இலக்கிய மலர்களால் மணப்பதும் தமிழே
எழில்மிகும் திருவருட் பாவும்நற் றமிழே
                                       (தமிழை)

காப்பியம் ஐந்தினைக் கண்டதும் தமிழே
கம்பனின் கற்பனை வளமதும் தமிழே
மூப்பிலா அகம்;;புறம் உள்ளதும் தமிழே
முத்தமிழ் எனும்பெயர் பெற்றதும் தமிழே
                                       (தமிழை)

lundi 27 août 2012

என்னுயிர்த் தமிழணங்கே!





செம்மொழித் தேனெனும் செந்தமிழ்ச் சீரினைச்
   சிந்தையுள் சேர்த்துவைத் தேன்!
     சீரொடு திகழ்ந்திடும் நேரொடு மொழிகளில்
        சிறந்தவள் தமிழணங் கே!

நம்மொழி அதுவென நம்மின உயிரென
   நாளுமே நன்குரைத் தேன்!
     நல்லறங் கூறிடுஞ் சொல்லற மிக்குடை
        நல்லவள் தமிழணங் கே!

மும்மொழி பிரிவுள முத்தமிழ் அன்னையை
   முக்கனி போல்சுவைத் தேன்!
     முடியுடை வேந்தரின் மடியிலே முத்தென
        முகிழ்த்தவள் தமிழணங் கே!

இம்மொழிக் கிணையென எம்மொழி யுண்டென
   இயம்புக எனப்பகன் றேன்!
     இனிக்கவும் செய்குவள் மணக்கவும் செய்குவள்
        என்னுயிர்த் தமிழணங் கே!