samedi 14 février 2015

கவிஞர் பாரதியே!



கவிஞர் கி. பாரதிதாசனின் “சொல்லோவியம்”  
கவிதை நுாலுக்குச் சாற்று கவி

நல்ல நல்ல எதுகைகளும்
     நலஞ்சேர் வண்ணம் மோனைகளும்
வல்ல வளஞ்சேர் இயைபுகளும்
     வளமாய்ப் பெற்றுப் பாவொளிரும்
சொல்லோ வியத்தைக் கண்டுவந்தேன்
     சொற்கள் யாவும் கற்கண்டாம்!
வெல்லும் தமிழால் விருந்தளிக்கும்
     வியனார் கவிஞர் பாரதியே!

கண்ணும் கண்ணும் பேசுவதைக்
     காதற் காற்று வீசுவதைக்
கண்ணி கள்தாம் கற்பவரின்
     கருத்தைக் கவர்ந்து கமழுவதை
எண்ணி யெண்ணி வியக்கின்றேன்!
     இளமை இனிமை காண்கின்றேன்!
மண்ணின் மாண்பை மகிழ்ந்தேத்தும்
     வளமார் கவிஞர் பாரதியே!

சென்ற விடத்தும் செந்தமிழின்
     சீரைச் சொல்லி வருகின்றாய்!
நன்றாம் காதல் கவிதைகளை
     நல்ல தமிழில் தருகின்றாய்!
உன்றன் பாக்கள் ஒவ்வொன்றும்
     உயர்ந்த சுவையாம் நல்லமுதே!
என்றும் வாழ்வில் தமிழ்ப்பணியை
     ஏந்தும் கவஞர் பாரதியே!

13.02.2015

1 commentaire:


  1. வணக்கம்!

    எல்லோரும் என்னை இனிதே புகழ்ந்தேத்தக்
    கல்லுாறும் யாப்புக் கலையுரைத்தீர்! - நல்லமுதச்
    சந்தக் கவிபடைக்கத் தங்கத் தமிழளித்தீர்!
    சிந்தை மணக்கும் செழித்து!

    RépondreSupprimer